செய்திகள்தலைப்புச் செய்திகள்யாழ்ப்பாணம்

தமிழ் மக்களின் கண்ணீரும் சாபமும் தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம்_ வலி வடக்கு மீள்குடியேற்ற புணர்வாழ்வுச் சங்கம்!

நாட்டில் பஞ்சம் – பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குகின்றது. வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாயப் பூமிகளை ஆக்கிரமித்து இன்னமும் தம் வசம் படைத்தரப்பு வைத்துள்ளது. அந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரரான எமது மக்கள் அழுது அழுது ஏங்கிய கண்ணீர் – அவர்களின் சாபங்கள்தான் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம்.

இப்போதாவது அவர்களின் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுமாறு கோருகின்றோம். இவ்வாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் அ.குணபாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களே, 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டப்பட்டனர். சொந்த மண்ணுக்குச் செல்வோம் என்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகி 32 வருடங்கள் நிறைவுறுகின்றன.
பாதுகாப்புப் படைகள் வல்வந்தமாகக் கைப்பற்றிய எமது பூமியில் 6 ஆயிரத்து 500 ஏக்கரை நிரந்தரமாக கபளீகரம் நோக்குடன் 2013ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எமது போராட்டங்களாலும், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தாலும் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மீள ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலத்திலும் 500 ஏக்கரை பாதுகாப்புத் தரப்பும், பொலிஸாரும் இன்னமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.
போரே நடக்காத எமது பிரதேசங்களை மீள ஒப்படைக்கும்போது எங்கள் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள் என்று அனைத்துச் சொத்துக்களையும் இடித்தழித்து தரைமட்டமாக்கியே வழங்கினார்கள். நாம் காணி விடுவிப்புக்காக போராட ஆரம்பித்த பின்னர்தான் எமது சொத்துக்களை அழித்து துவம்சம் செய்தார்கள்.

அகதிகளாக அலைந்த நாங்கள், சொந்த மண்ணுக்குத் திரும்பியும் வீடு வாசல்கள் இல்லாது இருக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தின் தங்கம் என்று சொல்லப்படுகின்ற பலாலியின் வளம்கொழிக்கும் விவசாயக் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மீன்வளம் நிறைந்த மயிலிட்டிக் கிராமத்தின் அரைவாசிப் பகுதி விடுவிக்கப்படவில்லை.

எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படைத்தரப்பு தாங்கள் விவசாயம் செய்கின்றார்கள். நாங்கள் பட்டினியால் சாக அவர்கள் எங்கள் நிலங்களில் அறுவடை செய்து தங்கள் வயிறு வளர்க்கின்றார்கள்.
தென்பகுதியில் கடந்த மே 9ஆம் திகதி களேபரத்தில் அரசியல்வாதிகள் பலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள் சொத்துக்களை இழந்து ஒரு மாதத்துக்குள்ளேயே இழப்பீடு தருமாறு ஓலமிடுகின்றார்கள்.

ஆனால் எங்கள் சொத்துக்களை இடித்து தரைமட்டமாக்கி வாழ்க்கையை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்களே அவர்கள்தான். எங்களுக்கு இழப்பீடும் இல்லை மிகுதிக் காணி விடுவிப்பும் இல்லை.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதான். நாங்கள் அகதிகளாக அல்லல்படுகின்றோம். அவஸ்தைப்படுகின்றோம். தினம் தினம் கண்ணீர் விடுகின்றோம். எங்களின் கண்ணீரும், சாபமும் அவர்களைச் சும்மாவிடாது.

நாடே பட்டினியால் சாவடையும் இந்த நிலையில், வளம் கொழிக்கும் எங்கள் மண்ணை விடுவித்து, எங்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் பெறுமாறு, ஆட்சியாளர்களைக் கோருகின்றோம், என்றுள்ளது.

இதேவேளை, இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994