செய்திகள்

13ஐ நடைமுறைப்படுத்த வழிமுறை கூறுங்கள், இந்தியாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

13ஐ நடைமுறைப்படுத்த ஒரு வழிமுறை கூறுங்கள், இந்தியாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

 

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தப்படவேண்டும். எனினும், 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் வழிமுறை ஒன்றை இந்தியா முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். மன்னாரில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதுதான் சிறந்ததாக அமையும். இந்தியா இந்தவிடயத்தில் முனைப்புடன் செயற்பட வேண்டும்.அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சினைகளை கையாள்வது என்பது கேலித்தனமாக விடயமாகவுள்ளது.

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளால் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நாட்டுக்கே உணவை வழங்குகின்ற விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. திட்டமிடப்படாத செயற்பாடு என கூறியமைக்கு காரணம், விவசாயிகளை இயற்கையான பசளைக்கு மாற்றவேண்டும் என்றால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். உடனடியாக செயற்கை உரத்தை நிறுத்தி இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று கூறினால் விவசாயிகளால் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தின் செயற்பாடுகள் வேடிக்கையாகவுள்ளன.எனவே விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை வழங்கிக்கொண்டு இயற்கையான உரத்துக்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்காக அடகு வைக்கிற தங்க நகைகளை மீட்கவும், பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்தவும் முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.இதனால் இலங்கை பெரும் பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் விவசாயிகளுக்கு உரம் வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அடைக்கலநாதன்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும்.

சுமந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாகப் பார்க்கத் தேவையில்லை. அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும். – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266