"புத்தியைத் தீட்டுவோம்"
"புத்தியைத் தீட்டுவோம்"

(ஆதவன்)

போரின் பின்னர் கடந்தகாலங்களைக் காட்டிலும் இம்முறை அதிகளவான மக்கள் மாவீரர் நாளை நினைவுகூர்வதற்கு அணி திரண்டிருந்தார்கள். பொலிஸார் நீதிமன்றங்கள் ஊடாக, தடைகளை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்த நிலையில், மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களைப் பூசித்தார்கள். மாவீரர் நாள் என்பது தமிழ் மக்களின் உணர்வுடன் இரண்டறக் கலந்ததுதான். அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் தற்போதுள்ள சூழலில் மாவீரர்நாளை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்காக அதனை எதிர்காலத்தில் குழப்பியடிக்கும் விதத்திலோ அல்லது சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் வகையிலோ யாரும் அணுகக்கூடாது. நீதிமன்றங்கள் ஊடாக தடையைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸார் எவ்வளவு தீவிரத்துடன் செயற்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மாவீரர் நாளை திட்டமிட்டுக் குழப்புவதன் ஊடாக எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் அவற்றைத் தடைவிதிக்கச் செய்யும் வகையிலான நகர்வுகளையும் முன்னெடுப்பார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ளவேண்டும். ஆனால், மாவீரர் நாளன்று நடந்த சில சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியிருக்கின்றன.

கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது படம் பொறிக்கப்பட்ட ரீ சேர்ட் அணிந்திருந்தார். அதே போன்று கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்ற 3 சிறுவர்கள், போராளிகள் அணிவதைப் போன்ற ஆடைகள் மற்றும் அவர்கள் கழுத்தில் தொங்க விட்டிருப்பதைப் போன்று இலக்கத்தகடு மற்றும் சயனைட் குப்பி என்பவற்றை அணிந்திருந்தார்கள். இந்தச் சிறுவர்களின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன. விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் கொடிகாமம் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றவர் கைதாகியிருக்கின்றார். சிறுவர்களும் அவர்களது பெற்றோரும்விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன. எனவே அதை மீறும் வகையில் செயற்படுவதானது எதிர்காலத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கான தடையை, பொலிஸார்  நீதிமன்றம் ஊடாகப் பெறுவதற்கு வழி கோலிவிடும்.

இலங்கையின் சட்டதிட்டங்களுக்குள் உள்ள நெளிவு சுழிவுகளைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமான மாவீரர் நாளைக் கடைப்பிடிக்கவேண்டுமே தவிர, உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் போட்டுடைத்துவிடக்கூடாது. நாம் புத்திசாதுரியத்துடன் விடயங்களை நகர்த்த வேண்டும். மாவீரர் நாளை நடத்துவதற்கு ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் ஏற்பாட்டுக் குழு இருக்கின்றது. இந்தக் குழுக்கள் மாவீரர் நாளுக்கு வருபவர்கள், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படவேண்டும். மாவீரர் நாள் நிகழ்வுக்கு நிரந்தரத் தடையை ஏற்படுத்துவதற்காக புல்லுருவிகளே அதி தீவிர தேசியப் பற்றாளர்கள் போல் களமிறக்கப்படலாம். எனவே உணர்ச்சி நிலையிலிருந்து எல்லாவற்றையும் நோக்காது அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவேண்டும்.(ஐ)  

#todaysrilanka #todaytamilnews #todayjaffna #srilankanews

367 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.