கனடாக் கனவில் மிதந்துகொண்டிருந்த ஈழத்தமிழ் இளையோருக்கு இடியாக வந்திறங்கியுள்ளது கனேடியப் பிரதமரின் புதிய அறிவிப்பு. கடந்த இரு வருடங்களாக கனடாவுக்கான விசாவில் கடைப்பிடிக்கப்பட்ட தளர்வுப் போக்கை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நிறுத்துவதோடு, இனிமேல் முன்னரைவிடவும் மிக இறுக்கமான விசா நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பே இப்படி ஈழத்தமிழ் இளையோரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியுள்ளது. தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத் துள்ளதன் பின்னணியேகனேடிய அரசின் இந்த முடிவுக்கு காரணமாகும். கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காக தற்காலிகமாக குடி பெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப் புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தோடு, அரசுக்கு எதிரான போக்கும் அதிகரித்துள்ளது. இதனாலேயே வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா நடைமுறையை மிக இறுக்கமாக்கும் முடிவை எடுத்துள் ளது கனடா அரசு. இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் கனடாவில் தற்காலிகமாகக் குடியேறினார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள். கனடாவின் விசாக் கதவுகள் அகலத் திறந்த வேளையில் தான், இலங்கையும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டுகொண்டிருந்தது. எனவே இலங்கையில் இருந்தால் வாழவேமுடியாது என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கில் கொட்டினாலும் பர வாயில்லை. கனடாவில் கால்வைத்தால்போதும் என்று ஈழத்தமிழ் இளையோர் மட்டுமல்லாது எல்லோருமே சிந்தித்தார்கள். அதன் விளைவாக குடும்பம், குட்டியோடு எல்லோரும் கனடாவுக்கு மூட்டை முடிச்சுகளுடன் பறக் கத் தொடங்கினர். இலங்கையில் மருத்துவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் இருந்தவர்கள்கூட. அந்தப் பதவிகளை உதறிவிட்டு கனடாவுக்கு ஓடினார்கள். அந்தளவுக்கு கனடாக் கனவு எல்லோரையும் பேய்போல பிடித்து ஆட்டத்தொடங்கியது. இதனால் இப்போது கனேடியர்களுக்கே அங்கு வேலை இல்லாத நிலைமை நின்ற வெள்ளத்தை வந்தவெள்ளம் கொண்டுபோனால் யார் தான் சும்மா இருப்பார்கள்? அவர்கள் அரசின் இந்தக் கொள்கைக்கு எதிராகக் கடுமையாக அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் எனைய சேவைகளுக்கு கனடாவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக் கத்தில் அந்தத் திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர் வோரை தடுக்கும் முடிவை அந்தநாட்டு அரசு எடுத் துள்ளது. இதைவிட, நிரந்தரக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைப் பதற்கும் கனேடிய அரசு திட்டமிடத் தொடங்கியுள்ளது. நிரந்தர வதிவிட நியமனங்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்தல் மற்றும் கற்கை அனுமதிகளை கட்டுப்படுத்துவதை புதிய கொள்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதனால் இனிமேல் கனடாவுக்கு இங்கிருந்து செல் வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். தகுந்த காரணமின்றி அல்லது வேலைக்கான அனுமதிப்பத்திரம் இன்றி எக்காரணம் கொண்டும் கனடா விசா வழங்கப்படமட்டாது. அத்தோடு இங்கி ருந்து விருந்தினர் விசாவிலோ, சுற்றுலா விசாவிலோ கனடாவுக்குள் நுழைந்துவிட்டு, காலம் முழுக்க கனடா வில் இருக்கும் முயற்சிக்கும் ஆப்பு வந்துவிட்டது. விருந்தி னர் விசா, சுற்றுலா விசாவில் கனடாவுக்குள் வந்து சொந்த நாட்டுக்குத்திரும்பாமல், சட்டவிரோதமாகத் தங்கியிருப் பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் நிரந்தரக் குடியுரிமையைப் பறிப்பது தொடர்பிலும் கனடா அரசாங்கம் ஆலோசித்து வருகின்றாதாம். இனியும் அக்கரைப் பச்சைக் கனவுகளில் மூழ்காமல் சொந்தநாட்டில் சொந்தக்காலில் நின்று முன்னேறும் வழிகளை எமது இளையோர் கண்டடைவதே காலப்பொருத்தம்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
NOT TELL THE TRUTH ABOUT CANADA. WHO LIVED IN CANADA. THAT IS THE PROBLEM.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.