அதிகாரப்பகிர்வும் ரணிலும்
அதிகாரப்பகிர்வும் ரணிலும்

"இரா.சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகப் பங்காற்றினார். அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படவேண்டிய விதம் தொடர்பில் அவருக்குத் தனியான நிலைப்பாடு இருந்தது. அதை நிறைவேற்றுவதே அவருக்கான அஞ்சலி" இப்படித் திருவாய் மலர்ந்தருளியிருப்பவர் வேறுயாருமல்லர், சாட்சாத் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான். அவரது இந்த உரையின்படி, தான் உட்பட சிங்களத்தலைவர் எல்லோருமே அதிகாரப்பகிர்வை தங்கத்தாம்பாளத்தில் ஏந்தி, அதைத் தருவதற்கு தயாராக இருப்பது போலவும், தமிழர்கள் தான் அதனை வேண்டாமென்று சொல்வது போலவும் அர்த்தம் கொள்ளமுடியும். உண்மையாக அதிகாரப் பகிர்வுதான் சம்பந்தருக்கான அஞ்சலி என்று ரணில் உளமாரக்கருதியிருந்தால், அதனை வெறுமனே வாய் ஜாலத்தில் காட்டாமல், அதிகாரப்பகிர்வை வழங்கி விட்டு, சம்பந்தருக்கு உண்மையான அஞ்சலியைச் செலுத்திவிட்டேன் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும்.

அதிகாரப்பகிர்வு அல்லது சமஷ்டி என்ற சொல்லைக் கேட்டாலே, பேயைக் கண்டது போல சிங்கள அரசியல்வாதிகள் அலறித்துடிப்பதுதான் இலங்கையின் வரலாறெங்கும் நீண்டு வருகின்றது. ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அதிகாரப்பகிர்வை வழங்குவது பற்றிக் கதைத்தால் எதிர்க்கட்சியில் இருக்கும் எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்கள். அதனால் ஆளும் கட்சி அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டுவிடும். பின்னர் ஆட்சிமாற்றத்தால் முன்னர் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சிக்கு வந்து, அவர்கள் அதிகாரப்பகிர்வு பற்றிய நகர்வை மேற்கொண்டால், காட்சி அப்படியே தலைகீழாகி விடும். எந்தக் கட்சி முன்னர் அதிகாரப்பகிர்வை முன் வைத்து இப்போது எதிரணியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியே அதிகாரப் பகிர்வுக்கு எதிராக சீறிப்பாய்வ தோடு, சிங்கள மக்களையும் அதிகாரப்பகிர்வுக்கு எதிராகப் போராடத் தூண்டிவிடும். இப்படி மாறி மாறி தங்கள் அதிகாரத்துக்காக 'அதிகாரப்பகிர்வு' என்ற சொல்லாடலை சிங்களக் கட்சிகள் பயன்படுத்துகின்றனவேயன்றி, இதயசுத்தியோடு அவை செயற்படுவதில்லை.

தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வைவழங்குவதற்கான சந்தர்ப்பம் இரண்டு பேருக்கு கிடைத்திருந்தது. ஒரு வர், மஹிந்த ராஜபக்ச. மற்றவர் ரணில் விக்கிரமசிங்க. 2009 இல் போர் முடிவுக்கு வந்தபோது, மஹிந்த சொல்லும் எதனையும் கண்ணை மூடிக்கொண்டு கேட்க சிங்களமக்கள் தயாராக இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர் வொன்றை மஹிந்த வழங்கியிருந்தால், அதனை சிங்கள மக்களோ, எதிரணிகளோ எதிர்த்திருக்கப்போவதில்லை. ஆனால் மஹிந்த அப்படியொரு அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறினார். பொருளாதார நெருக் கடி மேலெழுந்து, அரகலய போராட்டம் உச்சம் பெற்று, கோத்தாபய விரட்டியடிக்கப்பட்டு, ஜனாதி பதிக்கதிரையில் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தபோது, அவர் சொல்வதை எதிர்க்கும் சக்தி எவருக்கும் இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி என்ற பித்தம் தீர்வதற்காக எதையும் செய்ய மக்களும், பிற கட்சியினரும் தயாராகவே இருந்தனர். பொருளாதார நெருக்கடியின் மூலகாரணமே இனப்பிரச்சினைதான். எனவே இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வை வழங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வை ரணில் முன்வைத்திருந்தால், நாட்டில் இனியொரு போதுமே பொருளாதாரச் சரிவென்பதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும். சந்திரிகா கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றில் வைத்து, தீயிட்டு அந்த அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவிடாமல் செய்த ரணில், தானாக மனமுவந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பாரென நினைப்பது அபத்தம். அதிகாரப்பகிர்வை வழங்கவென காலமளித்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு, இப்போது சம்பந்தருக்கு செய்யும் அஞ்சலி அதிகாரப்பகிர்வே என பசப்பு வார்த்தை பேசுவது எந்தவகையில் நியாயம்?

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

374 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.