“இன்று ஒரு தகவல்“
பெண்கள் உள்ளிட்ட அனைவரும் சாதாரணமாக தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
எனினும், தங்க நகைகளை வாங்கும் போது, பொதுவாக அனைவரும் சில தவறுகளை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த சிறிய தவறு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் வாங்கும் போது அனைவரும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்.
சுத்தமான 100 வீத தங்கத்தில் நகை செய்ய முடியாத காரணத்தல் பெரும்பாலும் 22 கரட், அதாவது 92 வீத சுத்தமான தங்கத்தில் நகை செய்யப்படுகிறது.
தங்கத்தின் தூய்மை கரட் எனப்படும் அலகால் குறிக்கப்படுகிறது. 24 கரட் தங்கம் 99.9 வீதம் தூய்மையாகவும் 22 கரட் தங்கம் 92 வீதம் தூயதாகவும் இருக்கும்.
அதன் தூய்மையை சரி பார்க்காமல் தங்க நகைகளை யாரும் வாங்கக் கூடாது. 24 கரட் தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.
அதனால் தான் தங்க நகைகளை செய்ய வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்த 14 கரட், 18 கரட், மற்றும் 22 கரட் தங்கம் பயன்படுத்துகிறது.
தங்க நகை வாங்கும் போது 91.6 வீத அளவிற்கான ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என பார்ப்பது அத்தியாவசியமாகும். ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய்மையான தங்கமாகும். ஹால்மார்க் நகையில் அந்தக் கடையின் பதிவு செய்யப்பட்ட உரிம எண் இருக்கும்.
நகையில் உள்ள எண் அந்தக் கடையின் உரிம எண் தானா என்பதையும் தங்கம் வாங்குபவர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
தங்கத்தின் விலை அதன் தரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. சந்தையின் வீதத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறும். அனைத்து நகைக் கடைகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தினசரி தங்கத்தின் விலையை காட்டுகின்றன. இதனை சரியாக கவனிக்க வேண்டியது அவசியம்.
தங்க நகை தயாரிக்கும் போது ஏற்படும் செய்கூலி மற்றும் சேதாரங்கள் நகையின் விலையுடன் சேர்க்கப்படுகின்றன. அந்த நகைகளின் செய்கூலி அந்த குறிப்பிட்ட நகையில் உள்ள டிசைன்கள் மற்றும் அவை இயந்திரத்தால் செய்யப்பட்டவையா அல்லது கைகளால் செய்யப்பட்டவையா என்பதைப் பொருத்தே அமையும்.
மனிதனால் தயாரிக்கப்பட்ட நகைகளை விட இயந்திரங்களால் செய்யப்பட்ட நகைகள் விலை குறைவானதாக இருக்கும்.
பெரும்பாலான தங்க நகைகள் எடை போட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால் அதிக எடை உள்ள நகைகள் விலை அதிகமாக கணிக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் தங்க நகைகளில் சேர்க்கப்படுகின்றன. இதனால் அவை அதிக எடையை காட்டும்.
எனவே, கற்கள் உள்ள நகைகளை வாங்கும் போது, அவற்றை நீக்கினால் எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.