சிரியாவில் 13 ஆண்டு சிவில் யுத்தத்தைத் தொடர்ந்து நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த ஜனாதிபதி பஷர் அஸாத் குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமஸ்கஸை கைப்பற்றிய நிலையில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் நேற்றைய நாள் ஆரம்பித்தது.
கிளர்ச்சியாளர்களால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட சூழலில் டமஸ்கஸில் கடைகள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிய நிலையில் அமைதி நிலவியது. பெரும்பாலும் வீதிகளில் கிளர்ச்சியாளர்களும் இத்லிப் நகரின் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுமே காணப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வட மேல் மாகாணமான இத்லிப் நகரில் இருந்து வெறுமனே 12 நாட்களுக்கு முன்னரே கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி டமஸ்கஸ் நகரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத், ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள சிரிய தூதரகத்தில் மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட கிளர்ச்சியாளர்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
டமஸ்கஸில் உள்ள உமையத் சதுக்கத்தில் நிலைகொண்டிருக்கும் கிளர்ச்சி போராளி ஒருவரான இத்லிப்பைச் சேர்ந்த பிர்தௌஸ் ஒமர், 2011 தொடக்கம் அஸாத் அரசுக்கு எதிராக போராடியதாகவும் தற்போது ஆயுதங்களை கீழே வைத்து விவசாயியாக தனது வேலைக்குத் திரும்ப முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘எமக்கு நோக்கம் மற்றும் இலக்கு ஒன்று இருந்தது. தற்போது நாம் அதனை எட்டியுள்ளோம். எமக்கு நாடு ஒன்று தேவை என்பதோடு பாதுகாப்பு படைகள் மாற்றப்பட வேண்டி உள்ளது’ என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தாவின் முன்னாள் இணை அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் கூட்டணி வேகமாக முன்னேற்றம் கண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முன்னேற்றம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட உலகளாவிய ரீதியில் பெரும் அகதிகள் பிரச்சினையை உருவாக்கிய சிரியாவின் நீண்ட சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் சிரியாவுக்கு தடைகளை ஏற்படுத்தி அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலையச் செய்தது. இந்நிலையில் துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தான் என அண்டை நாடுகளில் அடைக்கலம் பெற்ற மில்லியன் கணக்கான சிரிய அகதிகள் தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் சிரியாவின் எதிர்காலம் தொடர்பில் அண்டைய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகள் இடையே கவலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரத்தைப் பிடித்திருக்கும் அல் ஷாம் அமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் மற்றும் மேலும் பல நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளது. எனினும் கடந்த பல ஆண்டுகளில் அந்த அமைப்பு தனது நிலைப்பாடுகளில் மிதவாத போக்கை பின்பற்றி வருவதோடு அல் கொய்தாவுடனான தொடர்பை துண்டித்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவரான அபூ முஹமது அல் கொலானி என அறியப்படும் அஹமது அல் ஷரா, சிரியாவை கட்டியெழுப்புவதாக உறுதி பூண்டுள்ளார்.
‘இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் எமது சகோதரர்கள் புதிய வரலாறு ஒன்றை எழுதியுள்ளனர்’ என்று டமஸ்கஸில் உள்ள பண்டைய உமையத் பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் கூட்டத்திற்கு முன்னர் பேசிய அல் கொலானி குறிப்பிட்டார். கடுமையான உழைப்புடன் இஸ்லாமிய தேசத்துக்கான கலங்கரை விளக்காக சிரியா மாறும் என்றும் அவர் கூறினார்.
அஸாத் அரசின் பிரதமரான முஹமது ஜலாலி, ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அல் கொலானியை சந்திக்க விரும்புவதாகவும் ஆட்சி மாற்றத்திற்கான ஆவணங்கள் மற்றும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிரிய இராணுவத்தின் நிலை குறித்து தம்மிடம் எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அஸாத்தின் பொலிஸ் அரசு பிராந்தியத்தில் கடும் ஒடுக்குமுறை கொண்ட அரசுகளில் ஒன்று என்று அறியப்படுவதோடு அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் டமஸ்கஸை கைப்பற்றியதை அடுத்து கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைந்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் தாம் சிறை அனுபவித்த ஆண்டுகளை விரலால் காண்பித்தபடி வீதிகளில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இரகசிய நிலவறை சிறைகளில் அவசரக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஸாத்தின் அலாவித் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள ரஷ்யாவின் கடற்படைத் தளம் இருக்கும் மத்தியதரைக் கடற்கரையே கிளர்ச்சியாளர்களிடம் கடைசியாக வீழ்ந்த பகுதியாகும். கரையோர நகரான லடக்கியாவில் ஞாயிறன்று சூறையாடல்கள் இடம்பெற்றபோதும் நேற்று நிலைமை தணிந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வீதிகளில் ஒருசிலரே இருப்பதாகவும் எரிபொருள் மற்றும் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலாவித்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றி நினைத்ததை விடவும் நிலைமை சீராகவே இருப்பதாக இரு அலாவித் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சி போராளிகள் தனது நண்பரின் வீட்டுக்கு சென்று ஆயுதங்களை கையளிக்க கோரியிருப்பதாக அதில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லடகியாவுக்கு அருகாமையில் இருக்கும் அஸாத்தின் பூர்வீக கிராமமான கர்தஹாவுக்கு கிளர்ச்சியாளர்கள் இன்னும் நுழையவில்லை. அஸாத் ஆட்சியுடன் தொடர்புபட்ட ஊரில் இருக்கும் மூத்த பிரமுகர்கள் வெளியேறிச் சென்றுவிட்டதாக அந்த கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானின் லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் நேரடியாக தண்டித்ததன் விளைவாகவே அஸாத் அரசு வீழ்ந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த செப்டெம்பர் தொடக்கம் நடத்திய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களினால் அந்த அமைப்பின் கட்டமைப்பு பலவீனம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட தளங்கள் மீது இஸ்ரேல் ஞாயிறன்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய படைகள் சிரியாவுடனான எல்லையில் யுத்த சூன்ய வலயத்துக்குள் முன்னேறி வருகிறது.
சிரியாவின் கிழக்கே குர்திஷ் தலைமையிலான படைகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் 900 படைகள் அங்கு இயங்கி வருகிறன. இந்நிலையில் இஸ்லாமிய அரசு முகாம்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு எதிராக சுமார் 75 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.