வன்னிப் பிராந்தியப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் மிகவும் அதிகரித்துள்ளன. அவை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, வன்னி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக உள்ளனர். இன்னும் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் இல்லை. வன்னியில், மிக முக்கியமான பாடங்களான கணிதப்பிரிவு, உயிரியல் பிரிவுகளுக்குக்கூட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் கணிதப்பிரிவு ஆசிரியர்கள் 63 பேர் மேலதிகமாக இருக்கின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் மேலதிகமாகவுள்ள குறித்த கணிதப்பிரிவைச் சேர்ந்த 63 ஆசிரியர்களையும், ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்காமைக்கான காரணம் என்ன?. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் தரவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் - என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் குற்றச்சாட்டுத் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வே.ஆயகுலன் கருத்துத் தெரிவிக்கையில்:
'புதிய ஆசிரிய நியமனங்களை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கே வழங்கி வருகின்றோம். எனினும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் வெளிமாவட்டச் சேவைக்காலமான எட்டு வருடங்கள் முடிவுற்றவுடன், ஆசிரியர்கள் தமது இடங்களுக்கு இடமாற்றம் கோரிச் செல்கின்றனர். இதனால்தான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது.
இருப்பினும் வன்னி மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக ஆசிரிய இடமாற்றங்கள் கோரப்படுகின்றபோது, இடமாற்றம் கோருகின்ற குறித்த ஆசிரியருக்கான வெற்றிடம் மீள் நிரப்பப்படாமல், இடமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாதென வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருக்கின்றார். இந்த உத்தரவை வலையக்கல்விப் பணிப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். விரைவில் இந்தப் பிரச்சினை சீரமைக்கப்படும்' என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.