ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனவீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பளத்தின் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உப்பளத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக்காட்டி போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் தொழிலாளர்களிடம் அறிவுறுத்தி வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பினை இங்கே பொதியிடுங்கள். மன்னார், அம்பாந்தோட்டை, புத்தளத்துக்கு கட்டி உப்பினை கொண்டு செல்வதை நிறுத்தி, ஆனையிறவில் பொதியிடுங்கள்.
தொழிலாளர்களுக்கு தினமும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும். உப்பள முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுங்கள், ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என மாற்றம் செய்யுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் பந்தல் அமைத்து எமது கனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலிஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்று எமது கவனவீர்ப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் இங்கிருந்து கட்டி உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். அதை நாங்கள் வன்மையான கண்டிக்கிறோம் என்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.