2024 ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை விகிதங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய அரச வங்கி (SBI) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தீவிர வறுமை குறைந்தபட்சமாகக் குறைந்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
” இந்தியாவில் வறுமை விகிதங்கள் தற்போது 4 முதல் 4.5 சதவீத மட்த்தில் உள்ளது என்றும், மிகக் குறைந்த அளவு தீவிர வறுமை நிலவுவதாகவும் கருதுகிறோம்” என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நுகர்வு செலவு கணக்கெடுப்பின் தரவுகளால் பல ஆண்டுகளாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை நிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கணக்கெடுப்பின்படி, கிராமப்புற வறுமை 2024 நிதியாண்டில் 4.86 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது2023 நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும், 2012நிதியாண்டில் 25.7 சதவீதமாகவும் காணப்பட்டது. இதேபோல், நகர்ப்புற வறுமை 2024 நிதியாண்டில் 4.09 சதவீதமாகக் குறைந்துள்ளது.2023 நிதியாண்டில் 4.6 சதவீதமாகவும், 2012 நிதியாண்டில் 13.7 சதவீதமாகவும் காணப்பட்டது.
கடந்த பத்து ஆண்டுகளில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறியிருந்தார்.
2021 மக்கள் தொகை மதிப்பீட்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கிராமப்புற-நகர்ப்புற மக்கள்தொகை தரவு வெளியிடப்பட்டால் வறுமை மதிப்பீடுகள் சிறிய திருத்தங்களுக்கு உட்படக்கூடும். இருப்பினும், எதிர்வரும் ஆண்டுகளில் நகர்ப்புற வறுமை அளவுகள் மேலும் குறையக்கூடும் என்று எஸ்பிஐ ஆராய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“2021 மக்கள் தொகை மதிப்பீடு முடிந்து புதிய கிராமப்புற நகர்ப்புற மக்கள்தொகை கணிப்பு வெளியிடப்பட்டதும் இந்த எண்ணிக்கைகள் சிறிய திருத்தங்களுக்கு உட்படக்கூடும். நகர்ப்புற வறுமை மேலும் குறையக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகளுக்கான வழிமுறை 2011-12 இல் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டுடன் ஆரம்பிக்கிறது.இது தசாப்த பணவீக்கத்திற்கும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) தரவுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு கணக்கீட்டு காரணிக்கும் ஏற்ப திருத்தப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய வறுமைக் கோடு கிராமப்புறங்களுக்கு ரூ.1,632 ஆகவும் நகர்ப்புறங்களுக்கு ரூ.1,944 ஆகவும் உள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட வறுமைக் கோடு மற்றும் பின்னடைவு விநியோகத் தரவுகளைப் பயன்படுத்தி, 2024 நிதியாண்டில் கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 4.86 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.09 சதவீதமாகவும் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
கிராமப்புற வறுமையில் குறைவு ஏற்படுவதற்கு, மக்கள்தொகையில் கீழ்மட்ட 5 சதவீதத்தினரிடையே நுகர்வு வளர்ச்சி அதிகரித்ததே காரணம் என்று அறிக்கை கூறுகிறது.இது வறுமைக் கோட்டில் மாற்றத்திற்கு வழிவகுத்தது.
வறுமை நிலைகளில் ஏற்பட்ட இந்தத் தெளிவான குறைப்பு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதிலும் நாட்டின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளுடன், நாடு வறுமையில், குறிப்பாக நகர்ப்புறங்களில் இன்னும் பாரிய குறைப்புகளை அடையத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.