இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இன்று புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய நிதியமைச்சர் இலங்கையின் இயற்கை அருட்கொடைகள் மற்றும் மனித திறைமைகள் தொடர்பில் பாராட்டி தனது பேச்சை ஆரம்பித்த அவர், இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் நெருக்கமாக ஈடுபடுவதன் மூலம் இந்த பலங்களைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தும் தொடர்பில் கலந்துரையாடினார். அவ்வாறே, இந்தியா போன்ற பெரிய சந்தையை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று குறிப்பிட்ட அவர், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளை இதன்போது தெரிவித்துக் கொண்டதோடு, ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர். கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை தொழிநுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்தார்.
நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி புத்தாக்கம், அரச-தனியார் கூட்டு முயற்சியாண்மைகள், ஆராய்ச்சி மற்றும் வணிகத் துறைகளுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தியாவுடனான நெருக்கமான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்திக் கொள்ள தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்போடுள்ளதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.