கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்!
கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நேற்று முன்னெடுக்கப்பட்டது. நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு பல நாடுகளின் ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இறுதிப் போரில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கொடூரமான தாக்குதலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். குறுகிய பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களாலும், விமானத் தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக மாறியுள்ள இந்தக் கொடூரப் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகள் கழிந்துள்ளன.
இறுதிப்போரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை தமிழ் மக்கள் ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் திகதி நினைவேந்தி வருகின்றனர். இந்த ஆண்டும் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாயகத்தின் ஏனைய பல இடங்களிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.15 மணியளவில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. முற்பகல் 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. முற்பகல் 10.31 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் கீதம் இசைக்கப்பட்டது. சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளை நினைவேந்தி சுடர் ஏற்றிக் கண்ணீர் விட்டுக் கதறியழுதனர். அந்த அழுகுரல்களால் அந்தப் பகுதியே சோகமயமானது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.