பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில், புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் நீண்டகாலமாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் பாலத்துக்குள் மோட்டார்சைக்கிளுடன் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த அன்ரன் சாந்தன் (வயது 23), சசிகரன் சிம்புரதன் (வயது 21) ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். பாலத்தின் வழியாகப் பயணித்த பொதுமக்கள் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பாலத்துக்குள் பார்த்தபோதே சடலங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது என்றும், இதையடுத்தே சடலங்கள் மீட்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இருவரை காணவில்லை என்று அவர்களின் உறவினர்களால் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருகோணமலைப் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. எனவே, இளைஞர்கள் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
பரந்தன் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குள் வீழ்ந்ததிலேயே இந்த இறப்புகள் சம்பவித்துள்ளன என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சம்பவ இடத்திலிருந்து 71 ஆயிரத்து 100 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.