கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் ராஜா குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளர் மொஹமட் ஆலம், வடமாகாண கடற்றொழில் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர், அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீன்பிடிச் சட்டத்திருத்தம், உள்ளுரில் தடை செய்யப்பட்டுள்ள மின்பிடி நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்ததாவது:
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்கு காண்பித்தனர். அதேபோல இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர். இந்த விடயங்களும் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல்வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.
அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும்' - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.