செங்கடல், அரபிக் கடல், பாப் அல்-மந்தாப் நீரிணை, ஏடன் வளைகுடா ஆகியவற்றின்வழி செல்லும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாங்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தவிருப்பதாக ஏமனின் ஹூத்தி படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு ஓரளவு அமைதி நிலவியது. இப்போது அந்த அமைதி முடிவுக்கு வரவிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹூத்தி படைகள், கப்பல்களைக் குறிவைத்து 100க்கும் மேலான தாக்குதல்களை நடத்தின. காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் தாங்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பதாக ஹூத்தி குறிப்பிட்டு வந்துள்ளது.
ஹூத்தி தாக்குதல்களில் இரண்டு கப்பல்கள் மூழ்க நேரிட்டது. ஒரு கப்பலை அந்தப் படைகள் பிடித்து வைத்தன.
மேலும், ஹூத்தி தாக்குதல்களில் குறைந்தது நான்கு கப்பல் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹூத்தி நடத்திய தாக்குதல்களால் உலக கப்பல்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நிறுவனங்கள், தங்கள் கப்பல்களைத் தெற்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி கூடுதல் நீளமான மாற்றுப் பாதைகளை எடுக்க வைக்கும் நிலை ஏற்பட்டது. அத்தகைய மாற்றுப் பாதைகளில் செல்வதற்குக் கூடுதல் செலவும் ஆனது.
காஸாவுக்குள் உதவிப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்; இல்லாவிடில் இஸ்ரேல் மீதான தங்கள் கடற்படைத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று ஏமனின் ஹூத்தி தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) எச்சரிக்கை விடுத்திருந்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.