அயல்நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்பங்கள் காரணமாக, இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த பல்லாயிரம் மக்களுக்கு குடியுரிமைத் திருத்தச்சட்டம் ஓர் அருமருந்தாக அமைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார் இந்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா, அண்டை நாடுகளில் துன்பங்களைச் சகித்துக் கொண்ட மக்கள், இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த பின்னரும் அதே நிலையை எதிர் கொள்வது பெரும் அபத்தம் என்றும் இயம்பியிருக் கின்றார் அவர்.
இந்த வருடம் இடம்பெற்ற இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, அங்கு பா.ஜ.க. அரசாங்கத்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் புதுப்பிக்கப்பட்டது. இதன்மூலம், கடந்த 75 ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு 'அதாவது சுதந்திர இந்தியா மலர்ந்த பின்னர், இந்தியாவுக்குள் தஞ்சமடையும் ஒருவர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் இலகுபடுத்தப்பட்டன. எனவே, அமித்ஷாவின் கூற்றுகளையோ அல்லது பா.ஜ.க. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையோ குறைமதிப்பீட்டுக்கு உட்படுத்த இயலாது.
ஆனால், அயல்நாடுகளில் வஞ்சிக்கப்படும் இனங்களுக்கு, மதக்குழுமங்களுக்கு நீதியை வழங்கியிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அமித்ஷா தரப்பினர், அந்த நீதியை, நியாயத்தின் பாற்பட்டு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமாகத்தான் வழங்கியிருக்கின்றனரா? என்ற கேள்விக்கான பதிலைத் தேடவேண்டியிருக்கின்றது. ஏனெனில், அயல் நாடுகளில் வஞ்சிக்கப்படும் இந்துக்களும், சமணர்களும், பௌத்தர்களும் மற்றும் சீக்கியர்களும் தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், இந்தியக் குடியுரிமையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.. மேற்குறிப்பிட்டுள்ள நான்கு பிரிவினருக்கும் அப்பாற்பட்ட இன, மத குழுமங்களுக்கு நீதியென்பது இன்னமும் இந்தியாவில் எட்டாக்கனி தான்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, பல்லாயிரம் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்குள் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். ஆனால், முகாம் வாழ்க்கையே இன்றளவும் அவர்களுக்கு முடிவென்றாகியிருக்கின்றது. பரந்துபட்ட திட்டம் ஒன்றின் மூலம் அவர்களுக்குக் குடியுரிமையை வழங்க இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அவ்வாறாயின், இலங்கையில் சொல்லொணாத் துன்பத்தைச் சந்தித்த ஈழத்தமிழினம், பல்லாண்டு காலமாக இந்தி யாவில் 'அகதி' என்ற பெயரில் அல்லாடிக் கொண்டிருக்கின்றதே. இது அமித்ஷாவுக்கு அபத்தமாகப் படவில்லையா?
இந்தியக் குடியுரிமை கிட்டுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ள இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களை விடவும், ஈழத் தமிழர்கள் குடியுரிமை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க கூடுதல் உரித்துடையவர்கள். ஏனெனில், இலங்கையில் இடம்பெற்ற நீண்டதும் நெடியதுமான போரில் இந்தியாவின் நேரடித்தலையீடு மிகமிக அதிகம், போரின் பின்னரும்கூட தமிழர்களின் நீதி யென்பது இங்கு எட்டாக்கனிதான். எனவே, பிராந்திய வல்லரசென்ற வகையிலும், 'தமிழர்களின் மீட்பராக' தன்னை அடையாளப்படுத்தும் ஒரு தேசம் என்ற ரீதியிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாஜ.க அரசாங்கம் எந்த நியாயத்தையும் செய்யவில்லை என்பதே உண்மை.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.