உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐ.சி.சி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11ஆயிரத்து637 கோடி ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக ஐ.சி.சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 10 நகரங்களில் 2023 ஒக்ரோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இந்த உலகக் கிண்ணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதுடன் ஐ.சி.சி நிகழ்வுகளின் பெறுமதியும் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய இரண்டு நிறுவனங்களின் நேரடி முதலீடும், மாநில கிரிக்கெட் சங்கங்கள் மூலம் விளையாட்டரங்குகளை மேம்படுத்தும் திட்டமும் இணைந்து பல்வேறு துறைகளில் உள்ள இந்திய வணிகங்களுக்கு நேரடி பலன்கள் கிடைக்கச் செய்துள்ளன.
போட்டிகள் நடத்தப்பட்ட நகரங்கள் அனைத்திலும் சுற்றுலாத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தது. தங்குமிடங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் மூலம் 861.4மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு தாராளமாக இருந்ததென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை 1.25 மில்லியன் பார்வையாளர்கள் நேரடியாக கண்டு களித்துள்ளனர். இந்தியாவில் தங்கியிருந்த சர்வதேச பயணிகள் பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளதன் மூலம் 281.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.