ஐ.பி.எல். தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கமைய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்றிரவு அஹமதாபாத், நரேந்தர மோடி விளையாட்டரங்கில் மோதவுள்ளன.
கடந்த 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அதேவேளை, 2014இல் கிங்ஸ் இலவன் பஞ்சாப் என்ற முந்தைய பெயரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 18 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 101 ஓட்டங்களுக்கு சுருட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
போட்டியில் சுயாஷ் ஷர்மா, ஜொஷ் ஹேஸ்ல்வூட், யாஷ் தயாள் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பில் சொல்டின் ஆட்டம் இழக்காத அதிரடி அரைச் சதம் என்பன றோயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
முதலாவது தகுதிகாணில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தபோதிலும் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட பஞ்சாப் கிங்ஸ் தகுதிபெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்று தனது அணி இலகவாக வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.
இந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் வரலாற்றில் 36 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் அவை இரண்டும் தலா 18 தடவைகள் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.