சீனாவில் ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டு புதிதாக 12 பற்கள் வைக்கப்பட்ட நபர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், பற்கள் பிடுங்குவதற்கு அளிக்கப்பட்ட மருந்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜின்ஹுவா பகுதியில் இயங்கி வரும் பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஹுவாங் என்பவர் சென்றுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஒரே நாளில் 23 பற்களை மருத்துவர் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து, புதிதாக 13 பற்களை அதே நாளில் வைத்துள்ளார்.
இந்த சிகிச்சையை தொடர்ந்து வீடு திரும்பிய ஹுவாங், 2 வாரத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பற்களை பிடுங்கிய பிறகு தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வந்த எனது தந்தை இவ்வளவு சீக்கிரம் உயிரிழப்பார் என்று நினைக்கவில்லை, நாங்கள் புதிதாக வாங்கிய காரை ஓட்டும் வாய்ப்புகூட அவருக்கு கிடைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு கண்டனம் எழுந்த நிலையில், யோங்காங் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமைக்கு செப். 3-ஆம் தேதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்கள் மீது நடத்தப்படும் சோதனை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் மூத்த பல் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,
“ஒரே சமயத்தில் இத்தனை பற்கள் தான் பிடுங்க வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் எதுவும் இல்லை. இருப்பினும், நடைமுறையில் 10 பற்கள் என்ற வரம்பு உள்ளது.
ஆனால், 23 பற்களை பிடுங்குவது என்பது மிகவும் அதிகம். இதற்கு அனுபவம் இருந்தால் மட்டும் போதாது, நோயாளியின் உடல் திறனையும் கருத்தில் கொள்வது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பல் மருத்துவத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்களும், மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.