எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு உயர்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் மாவட்ட செயலர்;
கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளார்கள்.
இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்து ஆராயப்பட்டது.
இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவை சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் என 8 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என ஆயிரம்பேர் உள்ளடங்கலாக 9 ஆயிரம்பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கலந்துகொள்பவர்களுக்குரிய உணவு வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும், 15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்துக்காக இ.போ.ச இன் பேருந்துகளும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன. 14ஆம் திகதி காலை 4 மணிமுதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பேருந்துகள் புறப்படும்.
அவர்களுக்குரிய போக்குவரத்து கட்டணமாக, நெடுந்தீவில் இருந்து கச்சதீவு செல்வதற்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரம் ரூபாவும், குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு செல்பவர்களுக்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரத்து முந்நூறு ரூபாவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள யாத்திரிகர்கள் தங்களுடைய சுகாதார செயற்பாடுகளை பரிசீலிப்பதற்காக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். கடந்த வருடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது அதில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சுங்கத் திணைக்களத்தின் பிரசன்னமும் இன்றைய கூட்டத்தில் இருந்தது. இந்தியாவில் இருந்து வருகின்ற யாத்திரிகர்களை, சரியான நடைமுறைகளுக்கு அமைவாக வரவேற்று அவர்களை ஆலய வழிபாட்டு செயற்பாடுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அடுத்தகட்ட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு, எடுக்கப்படவுண்டிய இறுதித் தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது- என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.