கடன்கொண்டான் நெஞ்சம்; கலங்குதலும் ஆனந்தமும்
கடன்கொண்டான் நெஞ்சம்; கலங்குதலும் ஆனந்தமும்

...கடன் கொண்ட நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்"

என்று இராவணனின் கையறு நிலையை 'இராமாயணக் கீர்த்தனைகளில் சொல்லியிருந்தார் அருணாசலக் கவி ராயர். அந்தக் காலத்தில் கடன்படுதல் என்பது தனிமனித னொருவனின் ஆளுமைக்கு இழுக்கான விடயமாக நோக்கப்பட்டது. அவ்வாறு கடன் வாங்கியவர்கள் உரியகாலத்தில் கடனைக் கொடுக்காவிட்டால், கடன் கொடுத்தவர்கள் இறுதியாக ஒரு காரியம் செய்வார்கள். கடனாளியை ஏதேனும் பொது இடத்தில் கண்டால், அங்கேயே அவரைச் சுற்றி ஒருவட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

'கடனை முழுவதுமாகச் செலுத்திவிட்டு இந்த வட்டத்தை விட்டு வெளியே போ' என்பது அதன் அர்த்தம். அவ்வாறு வட்டமிடுதல் என்பது ஒருவர் உயிரோடு இருந்தும் இல்லாதவன் போல தன் மதிப்பை சமூகத்தில் இழந்தே வாழ வேண்டியிருக்கும். எனவே அவ்வாறு தன்னைச் சுற்றிக் கடன் தந்தவர் வட்டமிடக்கூடாது என்பதற்காக கடன் பட்டவர்கள் எப்போதுமே கடனைச் செலுத்தும் வழி பற்றி யோசித்து கலங்குவார்கள். அதைத்தான் அருணாசலக் கவி உவமித்தார்...

கிட்டத்தட்ட இதே நிலைக்கு இலங்கையும் சென்றிருந்தது. கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான போருக்காக சிங்களப் பேரினவாத அரசு உலகெங்கும் கடன்களை வாங்கிக் குவித்திருந்தது. பணமாக மட்டுமல்லாமல் ஆயுதங்களாகவும் இந்தக் கடன்சுமை இலங்கையின் மீது திணிக்கப்பட்டது. போர் முடியும் வரை தாம் வழங்கிய கடனைப் பற்றி மூச்சும் காட்டாதிருந்த நாடுகள் எல்லாம், போருக்குப் பின்னர் 'வட்டியோடு கடனைத்தா' என்று இலங்கையின் கழுத்தைப் பிடித்தன.

அத்தோடு கொரோனாப் பெருந்தொற்று எஞ்சிக்கிடந்த பொருளாதாரத்தையும் வழித்துத்துடைத்துவிட, இலங்கை வாங்கிய கடனைச் செலுத்தமுடியாமல் வங்குரோத்தடைந்த நாடாக மாறியது. பொருளாதாரம் ஈடாடியதால், நாடும் ஆடத் தொடங்கியது. 'அரகலய' என்ற மக்கள் எழுச்சி, ஆட்சியாளர்களை ஓடவைத்தது. ஒற்றை ஆசனத்தோடு வந்த ரணிலுக்கு அதி கார மகுடம் சூட்டப்பட்டது. அவரும் 'இனி இழப்பதற்கு ஏதுமில்லை' என்ற கட்டத்தில் இருந்ததால், கண்ணை மூடிக்கொண்டு கடன்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினார்.

இப்போது இரவல் சேலையில் கொய்யகத்தை நன்றாகக் கட்டிக்காட்டுகின்றது ரணில் அரசாங்கம். ஏற்றுமதிகள் எதுவும் முன்னேறவில்லை, உள்ளூர் உற்பத்தியும் பெருகவில்லை. ஆனால், இலங்கையின் பொருளாதாரம் மட்டும் ஸ்திரமாகி விட்டது என்று இலங்கை அரசாங்கம் சொல்வதை மனநலப் பிறழ்வுள்ளவர்கள் கூட நம்ப மாட்டார்களே?

வெளிப்பார்வைக்கு எல்லாமே நல்லவிதமாக நடந்து கொண்டிருப்பதாக இருந்தாலும், புற்றுநோய் போல இலங்கையின் பொருளாதாரத்தை கடன் என்ற கிருமி மோச மாக அரித்தபடியே தான் இருக்கின்றது. இப்போது வாங்கிய கடன்களை எல்லாம் 2033ஆம் ஆண்டுக்குள் செலுத்தி முடிக்கவேண்டும். அதற்காக 2028ஆம் ஆண்டில் இருந்தே கட்டம்கட்டமாக அந்தக்கடன் தொகையை மீளச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். அதனால் இந்த நான்கு வருடங்களும் இலங்கை பொருளாதாரத்தில் மீண்டுவிட்டது போன்ற விம்பமே தோன்றும். ஆனால், 2028க்குப் பின்னர் காட்சி தலைகீழாகும். இப்போதிருப்பதை விட, கோத்தாபய பதவிக்காலத்தைவிட, மிக மோசமான பொருளாதாரச் சீரழிவொன்றை நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

கடன் வாங்கி, தாம் தூம் என்று செலவுசெய்து ஒரு கொண்டாட்டத்தைச் செய்தால் 'அவன் பணக்காரன்' என்றுதான் எல்லோரும் எண்ணுவார்கள். ஆனால், அந்தக் கடனைக் கட்டாமல், வேலைக்கும் போகாமல் இருந்தால் கடைசியில் கொண்டாட்டத்துக்காக வாங்கிய கடன் அந்தக் குடும்பத்தையே ஒட்டாண்டிகளாக்கி நடுவீதிக்கு துரத்திவிடும், இலங்கையும் இப்போது அப்படித்தான். நாடு நன்றாக இருப்பதுபோல தோற்றமளிக்கும் இந்தக்காலத்தில் ஜனாதிபதிக் கதிரையை இன்னொருமுறை ஸ்பரிசிக்க ரணில் ஆசைப்படுகிறார். அதற்காக அவர் இன்னுமின்னும் கடன்களை வாங்கவும் தயார். ஏனெனில் அடுத்தமுறை கடன் கொடுத்த நாடுகள் இலங்கையின் கழுத்தைப் பிடிக்கும் போது, ரணில் பதவியை விட்டுப் போய்விடுவார்.

புதிதாக ஆட்சிக்கு வருபவர்களே விழிபிதுங்க வேண்டியிருக்கும். இவற்றை வெளியே சொல்லாமல் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணங்கியதையும், சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்டக் கடன் கிடைக்கவுள்ளதையும் பெருவெற்றிபோல கொண்டாடி மகிழ்கிறது அரசாங்கம். கடன்பட்டார் நெஞ்சம் இராவணன் காலத்தில் கலங்கியது, இப்போது கடன்பட்டார் நெஞ்சம் ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கிறது...!

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

437 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.