கடற்போக்குவரத்தில் அசமந்தம் வேண்டாம்
கடற்போக்குவரத்தில் அசமந்தம் வேண்டாம்

யாழ்ப்பாணத்துக்கும் தீவகங்களுக்கும் இடையிலான கடற்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் படகுகளில் பெரும்பாலானவை உரிய தரநிர்ணயங்கள் இல்லாமலேயே சேவையில் ஈடுபடுகின்றன என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது, படகு மூழ்கியதால் பயணி ஒருவர் அண்மையில் உயிரிழந்த விடயம் தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அது தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சற்றும் குறைவில்லாத வரலாற்று நீட்சியுடையது தீவகத்தின் போக்குவரத்துப் பிரச்சினை. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டாலும், தீவகத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தீர்க்கப்படுமா என்பது இப்போது சந்தேகத்துக்குரிய விடயமே. போக்குவரத்துச் சீரின்மை காரணமாக தீவகம் தனிமைப்படுத்தப்பட்ட - சபிக்கப்பட்ட பிரதேசமாகிப் பல தசாப்தங்கள். தீவகத்துக்கான போக்குவரத்து மார்க்கங்களைப் புதுப்பியுங்கள் - பலப்படுத்துங்கள் என்று ஒவ்வொரு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போதும், இதர கலந்துரையாடல்களின் போதும் பொதுமக்களாலும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்ற போதிலும், அந்தக் கோரிக்கைகளெல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகவே பிரதிபலிக்கின்றன. இந்தவாரம், அடுத்தவாரம் என காலங்கள் இழுத்தடிக்கப்படுவதும், வழங்கப்படும் மாற்று ஏற்பாடுகள் பயனற்று இடையில் நிற்பதும்தான் தீவகப் போக்குவரத்தில் இதுவரை நாம் கண்டதும் கேட்டதும்.

பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் மிகப்பிரதானமானவை, வான் போக்குவரத்தும் கடற்போக்குவரத்தும் என்பர். இவ்விரு போக்குவரத்து மார்க்கங்களில் ஏற்படும் சிறு தவறுகள்கூட அத்தனை பேருக்கும் எமனாக வந்து முடியலாம். இதனால் தான், கடற்போக்கு வரத்தும், வான் போக்குவரத்தும் மிகப்பிரதானமான போக்குவரத்து மூலங்களாக உலகளவில் அடையாளப்படுத்தப்படுகின்றன. அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற சம்பவமொன்றை இங்கு குறிப்பிடுதல் சாலப்பொருத்தமாக அமையும். இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வரவிருந்த ஒரு விமானம் புறப்படுவ தற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், விமானத்தில் சிறு தவறு இருப்பதை விமானி கண்டுகொண்டார். இதை யடுத்து அவர் விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். அந்தத் தவறு நிவர்திக்கப்படும் வரைக்கும் அத்தனை பயணிகளும் விமான நிறுவனத்தின் செலவில், விடுதி யொன்றில் தங்கவைக்கப்பட்டு அடுத்தடுத்த நாள்களே இலங்கைக்குத் திரும்பினார்கள். இந்தத் தீவிரத்தன் மைக்குச் சற்றும் குறைவில்லாததுதான் தீவகத்துக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து.

ஒரு பிரதேசம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அந்தப்பிரதேசத்தின் உட்கட்டமைப்புப்பலப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் பிரதானமானது போக்குவரத்து. தீவக மக்களின் பொருளாதாரம் உயர்த்தப்படும், தீவகம் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் வாயால் வீராப்புக் காட்டும் அரசாங்கம், கடற்பலிகளைத் தவிர்த்து மக்கள் ஆரோக்கியமானநிலையிலும், திறன்பட்ட ரீதியிலும் போக்குவரத்துக்களை மேற்கொள்ள உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். தீவகத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழில் நடவடிக்கை போன்று படகுச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிதி மூலங்களை வழங்கி, அவர்களின் படகுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்த அரசாங்கம் பிரதானமாகச் சிந்திக்க வேண்டும் என்று தீவகத்துக்கான போக்குவரத்து, மிக இலகுவான அணுகல் தன்மையுடன் நிறைவேற்றப்படக் கூடியதாக மாற்றம் பெறுகின்றதோ அன்று தான் தீவகத்தினதும், யாழ். குடாவினதும் பொருளாதாரம் வளப்படும் - பலப்படும்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

278 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.