கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது. அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கே இருக்கிறது. அதனை இன்று செய்துள்ளது.
தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.
இதேவேளை மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அரசியல்குழு தலைவராக சம்மந்தன் அவர்களை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம்.
அவ்வாறு மாவைசேனாதிராஜாவை அழைப்போம் என நான் பிரேரித்திருந்தேன், ஆனால் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை, எனவே யாப்பின்படி நாங்கள் செல்லவேண்டும் என்று சிறிதரன்கூறியதன் காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லை.
இதேவேளை சிவிகே சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில திருத்தங்கள் செய்யப்பட்டது.
அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.
கட்சியின் 75 வது வருடநிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம். அதனையொட்டி மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர்குழுவிற்கு மாவைசேனாதிராஜா அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழாக்குழுவின் தலைவராக கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருக்கிற சிவிகே. சிவஞானம் அவர்களை நியமித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டகுழுவுடன் இணைந்து செய்வதாக என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.