அரசியல் பழிவாங்கலுக்காகவே நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதய கம்மன்பிலவைக் கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமயக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிவிதுறு ஹெல உறுமயக் கட்சியின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தில் எந்தவொரு இனத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அரசமைப்பின் 14(1) இல் அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு அமைவாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். உரிய காரணிகள் ஏதுமின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டாரெனில் பிணை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமையும். அதனால் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - என்று அந்தக்கட்சி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.