அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்களை அச்சுறுத்திய கடுமையான காட்டுத் தீ காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் நேற்றையதினம் வெளியேற உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்
கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டேர்) தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நீடிக்கப்பட்ட வறண்ட காலநிலையைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ள பலத்த காற்றானது தீப்பரவலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில்
தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் படை வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறிய கலிபோர்னியாவின் ஆளுனர் கவின் நியூசோம், பல கட்டிடங்கள் ஏற்கனவே தீக்கிரையாகிவிட்டதாகவும்
அரை மில்லியன் மக்கள் மின் வெட்டு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல மாதங்களாக கணிசமான மழை பெய்யாத மலைப்பாங்கான பகுதிகளில் மணிக்கு 100 மைல் (மணிக்கு 160 கி.மீ.) வேகத்தில் வீசும் சூறாவளி காற்று பல நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் வீடுகள் தீப்பிடித்து எரிவதையும், குடியிருப்பாளர்கள் தீயில் இருந்து தப்பிக்க தங்கள் செல்ல பிராணிகளுடன் வெளியேறும் காட்சிகளும் சமூக தளங்களில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.