போராட்டக்காலத்தில் மக்களை எழுச்சிகொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு மூச்சிழந்து விட்டன என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பொ. ஐங்கரநேசனின் 'வேர்முகங்கள்’ நூலின் அறிமுகவிழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார் .
அவர் மேலும் உரையாற்றுகையில், ஆயுதப்போராட்டம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வர வில்லை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடிவைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடர வேண்டும். போருக்குப் பின்னரான எமது இளைய தலைமுறையைத் தமிழ்த்தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ பலர் முன்னெடுத்து வருகின்றனர். எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.