இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் களத்தில் மிகவும் அமைதியான வீரர்களில் ஒருவர்.
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, தனது வழக்கமான பாணியை மீறி கோபமாக விளையாடுவதை சில சந்தர்ப்பங்களில் மட்டுமே காண முடியும்.
தோனி தனது பொறுமையை இழந்த ஒரு சூழ்நிலையைப் பற்றியும், இன்று அதற்காக அவர் வருந்துவதைப் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடந்தது.
போட்டியின் போது, அப்போதைய சென்னை அணியின் தலைவர் தோனி மைதானத்திற்குள் வந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் போட்டியின் கடைசி ஓவரில் நடந்தது. போட்டியின் கடைசி ஓவரில், சென்னை அணிக்கு மூன்று பந்துகளில் எட்டு ஓட்டங்கள் தேவைப்பட்டன. ராஜஸ்தான் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிக் கொண்டிருந்தார்.
ஸ்டோக்ஸ் வீசிய மெதுவான பந்து வீரரின் கைகளில் இருந்து நழுவி ஃபுல் டாஸாக மாறியது. இந்த கட்டத்தில், நடுவர் நோ-பால் என்று அறிவித்தார், ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் அந்த முடிவை ரத்து செய்தார்.
இதைப் பார்த்த தோனி கோபமாக மைதானத்திற்குள் நுழைந்தார். ஆனால் தோனி இப்போது அன்று செய்ததற்கு வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். களத்தில் கோபப்பட்ட சூழ்நிலைகள் ஏதேனும் உண்டா என்ற கேள்விக்கு பதலளித்த தோனி இவ்வாறு கூறியுள்ளார்.
“அவ்வாறு பல முறை நடந்துள்ளது; ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறை நடந்துள்ளது. அன்று நான் மைதானத்திற்குள் நுழைந்தேன். அது ஒரு பெரிய தவறு. இது மிகவும் பதட்டமான மற்றும் மன அழுத்தமான போட்டி என்பதால் நான் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலைகள் உள்ளன.
நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்கிறீர்கள்,” என்று தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தோனியைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சென்னை அணியின் முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.