காங்கோவில் மத்திய சிறையை கைதிகள் உடைக்க நடைபெற்ற முயற்சியில் 129 போ் உயிரிழந்தனா்.
காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் உள்ள மகாலா மத்திய சிறை அந்நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையாகும். 1,500 கைதிகளை அடைக்கும் இடவசதி கொண்ட அந்தச் சிறையில், 12,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா்.
அந்தச் சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதிகளுக்கு போதிய உணவு, குடிநீா், மருத்துவம், படுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மனிதத்தன்மையற்ற சூழல் நிலவியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தச் சிறையை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைதிகள் உடைக்க முயற்சித்தனா். அப்போது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால், கைதிகள் சிலரை சிறைக் காவலா்கள் சுட்டுக்கொன்றனா். அத்துடன் சிறையில் நெரிசல் ஏற்பட்டு பலா் உயிரிழந்தனா்.
மொத்தம் 129 போ் உயிரிழந்த நிலையில், அவா்கள் அனைவரும் கைதிகளாக என்ற விவரம் வெளியாகவில்லை. மேலும் சிறையில் எவ்வாறு நெரிசல் ஏற்பட்டது என்பது குறித்தும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடா்பாக காங்கோ உள்துறை அமைச்சா் ஜேக்குமின் ஷபானி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 24 கைதிகள், சிறைக் காவலா்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் 59 போ் காயமடைந்த நிலையில், சில பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சிறையில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக மத்திய சிறைக்கு அருகே உள்ள பகுதி மக்கள் தெரிவித்தனா். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.