ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லையேல், பங்களாதேஷில் தற்போது இடம்பெற்றுவரும் கலவரங்கள் தான் இலங்கையில் ஏற்பட்டிருக்கும். இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும் என்று இயம்பியிருக்கின்றார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி. அமைச்சர் பவித்ரா மட்டுமல்ல, ரணிலின் முகாமுக்குள் சங்கமித்துள்ள பல அமைச்சர்களும், ஏன் ஜனாதிபதி ரணிலும்கூட இதேகருத்தை கடந்த ஒருவாரத்துக்குள் பல தடவைகள் பிரதியெடுத்திருக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் ஏதோவொரு செய்தியை மக்களின் மனங்களுக் குள் வலிந்து திணிக்க எத்தனிக்கின்றனர்.
பங்களாதேஷில் இடம்பெற்ற போராட்டங்களும், இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களுக்குமான அடிப்படை ஒன்றாக இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. பொருளாதார நலிவுநிலையும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் இந்த இரண்டு போராட்டங்களுக் குமானவேர்கள். ஆனால், போராட்டங்களின் பின்னரான மறுசீரமைப்பு என்பது ஒன்றல்ல. கலவரங்கள், படுகொலைகள் என விரும்பத்தகாத ஜனநாயக விரோத சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பங்களாதேஷில் இடம்பெற்ற போராட்டங்கள் அதன் நோக்கத்தை கண்டடைந்திருக்கின்றன. ஆனால், இலங்கையில் இடம்பெற்ற அரகலயவோ அதன் உண்மையான நோக்கத்தை கண்டுகொள்ளவில்லை. 'வென்றும் வெல்லாமலும்' என்ற நிலையிலேயே அரகலய அஸ்தமித்துப்போனது. அதுவே உண்மை.
பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான அரசாங்கத்தை அடியோடு விலகுமாறே பங்களாதேஷில் இளைஞர்கள் வீதிக்கு இறங்கினார்கள். இன்று ஷேக் ஹசீனாவும் இல்லை. அவருடைய அரசாங்கமும் இல்லை. இளைஞர்கள் கைகாட்டிய அவர்களின் நம்பிக்கையை வென்ற மொக மட்யூனுஸ் (பொருளாதாரத்துக்காக நோபல் வென்றவர்) என்பவரின் தலைமையில்தான் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற யூனுஸ் செய்த முதலாவது நடவடிக்கை, போராட்டத்தை வழிப்படுத்திய இளைஞர்களை தன் அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டமைதான். ஆனால் இவ்வாறான ஆட்சி மாற்றம் இலங்கையில் நிகழ்ந்ததா?
கோத்தாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டாலும், அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும் அமைச்சுப் பதவிகளைத் தக்கவைத்தனர். ரணிலின் தலைமையில், ஓரிரு மாற்றுமுகங்களுடன், அமைச்சுகள் 'உள்ளகப் பரிமாற்றத்துக்கு'உட்பட்டனவே அன்றி நிலையான மாற்றமோ அல்லது மாணவர்கள் வலியுறுத்திய மாற்றமோ நிகழ்ந்ததாக இல்லை. இலங்கைக்கு மேலாகப் பறந்துதிரிந்த பிணம்தின்னிக் கழுகு, இந்தியாவின் உதவிகளாலேயே எட்டிப் பறக்க எத்தனித்தது. சர்வதேச நாணய நிதியமும் கரம்கொடுக்க இலங்கையின் திறைசேரி இயல்புற்றது. இதைத்தவிர ஜனாதிபதி ரணில் செய்ததென்று ஏதுமில்லை.
இவ்வளவு ஏன், இன்று பங்களாதேஷின் நிலைமையைக் கோடிகாட்டி ஜனாதிபதி ரணிலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கும் அமைச்சர் பவித்ரா, கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பொங்கல் பானையை ஆற்றுக்குள் போட்ட ‘அளப்பெரும் அறிவுத்தனம்' அவருடையது. 'பானையும் பவித்திராவும்' என முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்கள் தயாரிக்கப்படாத குறையாக அவர் சமூக வலைத்தளங்களை அன்று ஆக்கிரமித்திருந்தார். இயலாமைமிக்க அமைச்சரவையின் முதல் நபராக அவர் கொள்ளப்பட்டிருந்தார். ஆனால், இன்றும் பவித்ரா அமைச்சர்தான். சுகாதாரத்துறைக்குப் பதிலாக இன்று அவர்வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவ்வளவே. இந்த மாற்றத்தைத்தான் இளைஞர்கள் கோரினார்களா? இந்த மாற்றத்தால் பொருளாதாரம் மேம்படுமா? இன்னும் சொல்லப்போனால், இளைஞர்களின் போராட்டத்தை மௌனிக்கச் செய்து வரலாற்றுத் துரோகம் இளைத்தவர்தான் ஜனாதிபதி ரணில். துதி பாடுவதற்கும், மெச்சுவதற்கும் இதில் ஒன்றுமே இல்லை.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.