உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும் என்று சுவாமி சிவானந்தர் சொன்ன வார்த்தைகளை எம்மில் எவருமே கடைப்பிடிப்பதில்லை. மாறாக மற்றவர்களின் குற்றம், குறைகளை வெளிப்படுத்துவதிலும், அதனூடாக நம்மை உத்தமர்களாகக் கட்டமைப்பதிலுமே அதிக ஈடுபாடு காட்டுகின்றோம். அடுத்தவர்களைக் குற்றவாளிகள், கொடூரர்கள், மோசடியாளர்கள், துரோகிகள் என்று முத்திரை குத்துவதில் காட்டும் அக்கறையை நம்மைச் சுற்றி படரவிடுவதில் காட்டினாலேயே பெரும் சீர்கேடுகளையும், முறைகேடுகளையும் தவிர்க்கலாம். ஏனெனில் இப்போதெல்லாம் சமூகத்தை, குடும்பங்களை சீரழிப்பவர்களில் முன்னணியில் இருப்பது அதே சமூகத்தை / குடும்பத்தைச் சேர்ந்தோராக இருப்பதாக அண்மைக்கால குற்றவியல் பதிவுகள் சொல்கின்றன.
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சிறிய தந்தை தன் சகாக்களோடு கூட்டு வன்புணர்வு புரிந்தமை, பெற்ற மகளை செல்போனில் தாயாரே ஆபாசமாக வீடியோ பதிவு செய் தமை, மனைவியே தன் கணவனை கொன் றமை, பெற்ற தந்தையே தன் மகளை பாலியல் தொழிலில் ஈடுபட பலவந்தப்படுத்தல். அண்ணனே தங்கையைச் சீரழித்தல், ஒன்றரை மாதச்சிசுவைக் கொன்ற தாய் என அண்மைக் காலக் குற்றச்செய்திகள் ஒரு பயங்கரச் செய்தியைச் சொல்லி நிற்கின்றன. குடும்பக் குற்றவாளிகளின் பெருக்கம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி குற்றவாளிகள் வெளியில் இருந்தால், குடும்பத்தார் எச்சரிக்கையோடும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் செயற்பட்டால் அவர்களிடத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியும். ஆனால் குடும்பங்களுக்குள் குற்ற மனத்தோடு இருப்பவர்களை இனம் காண்பதோ, அவர்களிடம் இருந்து தப்புவதோ இயலாத காரியம். எனவே வெளியகக் குற்றவாளிகளைவிடவும் இந்தக் குடும்பக் குற்றவாளிகள் விடயத்தை இன்னும் பெருக விடுவது நம் சமூக இருப்புக்கே ஆபத்தானது.
இந்தக் குடும்பக் குற்றவாளிகள் உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணி, நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளை நாம் தொலைத்தமைதான். அன்பையும், பாசத்தையும், நற்பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்வியல் இப்போது வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியதன் விளைவே இந்தக் குடும்பக் குற்றவாளிகளின் பெருக்கம். எனவே நாம் இழந்துபோன கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட நம் மரபார்ந்த வாழ்வியல் கூறுகளை மீளக்கைக்கொள்வதன் மூலமே இந்தக் குடும்பக் குற்றவாளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.