கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், இறப்புக்குக் காரணமாக குண்டுவெடிப்புகளும் சூட்டுக்காயங்களும் காணப்படுகின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அவதானிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவுற்றுள்ளன. எனினும், தொடர்ச்சியான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மருத்துவ அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கியமான விபரங்கள் அடங்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இறந்தவர்கள் யார்? என அடையாளம் காணப்படவில்லை.
அந்தப் பணிகளுக்காக அல்லது அடையாளப்படுத்தலுக்காக காணாமலாக்கப்பட்டோரின் சங்கப்பிரதிநிதிகளை ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் என்பன காணப்படுகின்றன. சில என்புத் தொகுதிகளில் சில பகுதிகளே இருந்
தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது - என்றார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.