ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் நிர்ணயித்த 112 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல், 95 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து படுதோல்வியடைந்தது கொல்கத்தா. ஐ.பி.எல்.வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஓட்டங்களில் ஒரு அணியைக் கட்டுப்படுத்திய சாதனையை பஞ்சாப் படைத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் அபாரமான இன்னிங்ஸை அமைத்துக் கொடுத்தனர். 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் பிரியான்ஷ் ஆர்யா. 30 ஓட்டங்களுடன் பிரப்சிம்ரன் சிங்கும் வீழ்த்தப்பட்டார். இந்த இரண்டு இலக்குகளும் சரிக்கப்பட்ட பின்னர், பஞ்சாப்பின் இன்னிங்ஸில் ஏமாற்றமே மிஞ்சியது. ஷஷான் சிங் பெற்ற 18 ஓட்டங்ளே மூன்றாவது அதிகபட்சம். முடிவில் 111 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது பஞ்சாப்.
பந்துவீச்சில் ராணா 3 இலக்குகளையும். வருண்சக்கரவர்த்தி, நரைன் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினார்கள்.
பதிலுக்குக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்ப வீரர்களான குயின்டன் டி ஹொக் 2 ஓட்டங்களுடனும் நரைன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். 7 ஓட்டங்களில் 2 இலக்குகளை இழந்தது கொல்கத்தா. பதிலுக்குக் களமிறங்கிய ரகானே, ரகுவன்சி இருவரும் இணைந்து பொறுப்பாக ஆடினார்கள் அணி 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 17 ஓட்டங்களுடன் சஹலால் வீழ்த்தப்பட்டார் ரகானே. ரகுவன்சியும் 37 ஓட்டங்களுடன் பவிலியன் திரும்பினார். இந்த இலக்குடன் பஞ்சாப்பின் இன்னிங்ஸில் நம்பிக்கை பிறந்தது. வெங்கடேஸ் 7.ரிங்கு சிங் 2 என அடுத்தடுத்து வீழ்ந்தனர். ஒரு முனையில் ரசல் நிலைத்து நின்றாலும் மறுமுனையால் இலக்குகள் சரிக்கப்பட்டன. கடைசி இலக்காக ரசலும் ஆட்டமிழக்க முடிவில் 95 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது கொல்கத்தா. 16 ஓட்டங்களால் வென்றது பஞ்சாப். 4 இலக்குகளைக் கைப்பற்றிய சஹல் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
பதிலடி...
கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கிண்ணம் வென்றது. எனினும், ஸ்ரேயஸைத் தக்க வைக்காமல் அவரை கொல்கத்தா விடுவித்தது. இந்த விடயம் கிரிக்கெட் அரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட நிலையில், தன்னை வெளியேற்றிய கொல்கத்தாவை குறைந்த ஓட்டங்களில் சுருட்டி ஐ.பி.எல். சாதனையைப் படைத்துள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.