இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி, சாதனை படைத்துள்ளார்.
உலகெங்கிலும் இருந்து வந்த போட்டியாளர்களுக்கு இடையே, இவர் 3 ஆவது இறுதிப் போட்டியாளராகத் தெரிவாகி, அம்பாறை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அம்பாறை மாவட்டத்திலிருந்து சீ தமிழ் சரிகமப இசைப் போட்டி நிகழ்ச்சிக்குத் தெரிவான முதல் பாடகர் சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்றுக்குத் தெரிவான நேரத்தில் , மேடையில் உணர்ச்சிவசப்பட்ட அவர், நடுவர்களிடம் தன்னைப் பற்றிய விளக்கத்தை கண்ணீருடன் வழங்கினார். தான் அதிர்ஷ்டமில்லாதவன் என்றும், பட்டதாரியாகியா பின்னரும் கூட கடந்த ஐந்து வருடங்களாகத் தொழிலில்லாமல் குடும்பத்தை வழிநடத்த மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"வாழ்க்கையில் மறக்க முடியாதது, இந்தப் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் அம்மாவுக்கும், எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்," என்று அவர் கூறினார். சபேசன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான செய்தி வெளியானதில் இருந்து, அவருக்குச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சரமாரியாகக் குவிந்து வருகின்றன.
பாடசாலை மற்றும் கிராமத்துக் கலை நிகழ்வுகளில் தனது வசீகரமான குரல் வளத்தால் பல பாடல்களைப் பாடி, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர் சபேசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரிகமப இறுதிச் சுற்றில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என இலங்கை இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.