இலங்கை தொடர்பான விவகாரங்களில், சர்வதேசத் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தற்போதைய அரசாங்கம் தீர்க்கும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஆணையாளர் வோல்கர் ட்ரக்கின் வாய்மொழி அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது:-
2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கினார்கள். வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை. பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய, இலங்கையின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த நாடாளு மன்றம் இது முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன. இவ்வாறாக இலங்கை தற்போது சுமுகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற உள்நாட்டு நல்லிணக்கப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த தொடர்புடைய அலுவலகத்துக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.
மோதல்களில் உயிரிழந்தோரை நினைவுகூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன. சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயற்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அவற்றுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்.
ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள்
கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூகநிலை எதுவாக இருந்தாலும், அரசியற் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நல்லாட் சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை” என்ற நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது. ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொள்கின்றது. இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள்மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்பதையும் இலங்கை நம்புகின்றது - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.