சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்; பொறுப்பற்றுச் செயற்பட்டவர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும்!
சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்; பொறுப்பற்றுச் செயற்பட்டவர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும்!

அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
 
சாவகச்சேரி ஆதார மருத்துவமனை வினைத்திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்துக்கும் காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:
சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்குப் பதில் மருத்துவ அத்தியட்சகராகக் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு நிலவிவந்த நிர்வாகச் சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றைச் சீர்செய்வதற்குத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதனடிப்படையில் பெண் நோயியல் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைச்  செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் கடந்த 14 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அதை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.


நன்கொடையாளரால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அவற்றைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவ அத்தியட்சகர் முதற்கட்டமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவு ஆகியவற்றைச் செயற்படுத்தியுள்ளார்.


மேலும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேபோன்று குறித்த மருத்துவமனையில் உயிரிழப்பவர்களின் உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் அதனை சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களைத் தடுப்பதற்கும் மருத்துவர் அர்ச்சுனாவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


மருந்துப் பொருள்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றித் தரையில் போடப்பட்டிருந்தது. குறித்த மருத்துவமனையில் 22 மருத்துவர்கள் கடமையாற்றி வந்ததுடன் அவர்களுள் பெரும்பாலானவர்கள், மாதத்தில் 10 நாள்கள் மாத்திரமே மருத்துவமனையில் கடமையாற்றியுள்ளனர். இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு மருத்துவ அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள் அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொதுமக்கள் பெரியதொரு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
எனவே, குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுப் பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் - என்றார். (ச)

247 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.