வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு காரணங்களால் ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறித்த கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று (08) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்கு வேறு பல காரணங்களால் தேர்தலுக்கான ஆசன நியமனம் வழங்கப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும், சலசலப்பையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மந்தகதியில் காணப்பட்டது.
எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கட்சியின் ஆசன நியமனம் வழங்க மறுக்கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் தானாகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.
சுமந்திரனிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது வேறு பல காரணங்களை முன்வைத்து சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை சுமந்திரன் தொடர்பாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது கட்சியின் நலனுக்கு உகந்ததாக காணப்படும்.
இதை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை சார்பாக கேட்டு நிற்கின்றோம். அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள். அது கட்சியின் நலனுக்கான? என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.