சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், நேற்று முற்பகல் “Clean Sri Lanka” செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த வருடத்தில் நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பத்தாயிரம் வாடகை வாகன சாரதிகளுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு 25 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாகாணத்திலும் 10 நிகழ்ச்சிகளை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விரிவான அறிவை வழங்குவதற்கும், முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், போக்குவரத்து சேவைகளை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவூட்டல், சுற்றுலா பயணிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சேவைகளை வழங்குதல், சுற்றுலா முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான மென்பொருள் செயலியொன்றை அறிமுகப்படுத்துவதுடன், அதன் ஊடாக சுற்றுலாத் துறை தொடர்பான சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் அதிகாரிகள் குழு, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம், தேசிய ராக்ஸி எப் சாரதிகள் சங்கம், அனைத்து இணையவழி டெக்ஸி சேவை சாரதிகள் சங்கம், இலங்கை போக்குவரத்து செயலி பயன்பாட்டாளர்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.