செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள்.
ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.