இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
ஆகவே எமது கோரிக்கையை புரிந்து கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு நேற்று (21) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் தீவு பகுதியின் எதிர்காலம் மனிதர்கள் வசிப்பது கேள்விக் குள்ளாகப் போகிறது.
ஆரோக்கியமான சுற்றுச் சூழலில் மனிதர்கள் வசிக்க முடியாத சூழ்நிலையில் அபிவிருத்தி எதற்காக? இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பால் மனிதர்களாலேயே யாவும் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.
அது மனிதர்களுக்கு எதிராக மாறுமாக இருந்தால் அது பயனற்றது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை வளச் சுரண்டல் மனிதர்களின் வாழ்வியல் இருப்பை ஏற்புடையதாக்காது. மன்னார் தீவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தரைத் தோற்றத்தை விட மிகவும் தாழ்வானது. இயற்கை அனர்த்தத்தை தாங்கும் திறன் கொண்டதாக அதன் கட்டமைப்பு இல்லை என துறை சார்ந்த ஆய்வியலாளர்களின் கருத்தாக உள்ளது.
அதனால்தான் மன்னாரில் மூன்று மாடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதில்லை.
எனவே தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு, (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டுமென பொது மக்களின் சார்பில் சிவில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
இவை செயல்படுத்தப்பட்டால் மன்னார் தீவுப் பகுதியில் வசிக்க முடியாத நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும். மழை விட்டு ஒரு மாதம் கடந்தும் மழை நீர் ஓட முடியாமல் தேங்கி நிற்கிறது. அதனால் சிறு, குறு, குடிசைக் கைத்தொழில் யாவும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயமும் அழிவடைந்துள்ளன. பிரதான தொழிலாகிய மீன்பிடியும் பாதிக்கப்படுகிறது.
விஞ்ஞான ரீதியான அறிக்கைகள் என்பது மனிதன் உயிரிழக்கும் வரை காரண காரியம் தொழில்நுட்ப ரீதியாக படித்தவர்கள் என கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள்.
மிகச் சிறந்த உதாரணம் வலுக்கட்டாயமாக போடப்பட்ட கொரோனா ஊசியை தயாரித்த கம்பெனிகளே பக்க விளைவுகள் இருப்பதாக கூறுகின்றன.
அந்த விளைவுக்கு யார் பொறுப்பு ஏற்பது. உலகில் இயற்கையை மதிப்பீடு செய்ய எவராலும் முடியாது. அப்படி இருந்தால் இந்த உலகத்தில் இயற்கை அனர்த்தமே உருவாகாது.
படித்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் தவறான முகாமைத்துவத்தினால் தான் இந்த நாடே திவாலானது. எமது கோரிக்கையை மனித வாழ்வியலின் உணர்வுத் திறனாக பார்க்க வேண்டும்.
ஆனால் வழக்கமான வடகிழக்கு - தெற்கு இனவாத ரீதியான அடக்குமுறை செயற்பாடாகவே அரசு இதனையும் அணுகுகின்றது. எமது ஜனநாயக குரலுக்கு செவி மடுப்பதாக இல்லை.
துறை சார்ந்த திணைக்களங்கள் எம்மை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அணுகுகின்றன.
எந்தத் திட்டமும் மக்கள் விருப்பமின்றி செயல்படுத்த முடியாது. அவ்வாறு செயல்படுத்த முனைவது ஜனநாயக விரோதமாகும். நாம் காற்றாலைக்கு எதிரானவர்கள் அல்ல.
மன்னார் தீவுக்கு வெளியே மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் காற்றாலை அமைக்கலாம்.
தாங்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மன்னார் காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்துவோம் என வாக்குறுதி வழங்கினீர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆகவே எமது கோரிக்கை மறுக்கப்பட்டால் மன்னார் தீவுக்குள் மூன்று திட்டத்தையும் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தொடர்ந்து ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பே ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. ஆகவே எமது கோரிக்கையை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம் என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.