கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. தான் போட்டியிட்டிருந்தால் டொனால்டு டிரம்பை தோற்கடித்திருக்க முடியும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் மூலம் உலகப் பொருளாதாரம், சில நாடுகளுக்கிடையேயான மோதல் முதலானவற்றில் மாற்றம் ஏற்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதால், அதிகளவிலான தாக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெற்றிருந்தது.
ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான இருமுனைப் போட்டியில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 (51%) தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 (47.5%) தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளைப் பெற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன் எனவும், தனது மிகப்பெரிய வருத்தத்தையும் டிரம்ப் அவருக்கு அளித்த பாராட்டையும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பைடன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டபோது, அவரை தோற்கடிக்க எனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்ததாக நான் உண்மையிலேயே நினைத்தேன். “கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில்” தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருக்க முடியும். ஆனால் வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டு காலம் பதவியில் தொடரும் அளவுக்கு எனது உடல் நலம் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுவரை நலமுடன் இருக்கிறேன். ஆனால் வயது 86 வயதாகும்போது நான் எப்படி இருப்பேன் என்பது யாருக்குத் தெரியும் என்றார்.
மேலும் எனக்கு 85, 86 வயதாக இருக்கும்போது நான் ஜனாதிபதியாக இருக்க விரும்பம் இல்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகி மற்றொருவருக்கு வாய்ப்பளித்ததாக பைடன் கூறினார்.
அதேசமயம், டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வது என்பது சந்தேகம் தான் என கூறினார்.
டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய பைடன், தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப், எனது பொருளாதாதார சாதனைகள் குறித்து பாராட்டினார் என்றும், நான் ஒரு நல்ல சாதனையுடன் வெளியேறுவதாக கூறினார்.
அவரிடம் அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என்றும், அதற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள் என கூறினேன். அதற்கு டிரம்ப், எந்த பதிலும் கூறவில்லை’ என்றார்.
டிரம்ப் நிர்வாகத்தின் உயர் பதவிகளுக்கு யாரை நியமிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் தனது முடிவு இருக்கும் என்று பைடன் கூறினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.