ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் (DIHK) இடம்பெற்றது.
இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் அபிவிருத்தி திறன்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
குறிப்பாக தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் போக்குகளின்போது, இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையில் விசேட கவனம் செலுத்தப்பட்டது."இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல்: பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்" என்ற தலைப்பில் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் உரை நிகழ்த்தினார்.
இங்கு ஜேர்மன் நிறுவனங்களால், உற்பத்தி மூலங்கள், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலாத்துறை, விநியோகம் மற்றும் போக்குவரத்து,தொழில் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதற்காக Siemens Energy, Continental AG, GTAI, Giesecke+Devrient GmbH போன்ற உயர் மட்ட ஜேர்மன் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன, ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (DIHK) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி வோல்கர் ட்ரியர், ஜெர்மன் கூட்டாட்சி பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான (BMWE) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஓசனியா பிராந்தியத்தின் பகுதித் தலைவர் டோபியஸ் பியர்லின்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.