2024 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இலங்கை வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் அடங்கலாக மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளனர்.
மூன்று நாட்களைக் கொண்ட குறித்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது நாளைய தினம் நிறைவடையவுள்ளது. முதல் நாளான நேற்று ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் மெரோன் விஜேசிங்க 10.41 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தையும், அதே போட்டியில் வீரரத்ன தினேத் வெள்ளிப்பதக்கத்தையும் 10.49 வினாடிகளில் பெற்றுக்கெண்டார்.
இதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் எஸ். விஜேதுங்ககே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சவிந்து அவிஷ்கா பந்தய தூரத்தை 1 நிமிடங்கள் 49 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி அபேஷிகா பந்தய தூரத்தை 2 நிமிடங்கள் 10 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், சன்சலா ஹிமாஷினி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஜெயவி ரன்ஹிதா 15.62 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுடன் மகளிர் உயரம் பாய்தல் போட்டியில் டிகே டைம்ஷி வெள்ளிப் பதக்கத்தையும், வி.பி.நேத்ரா சமாதி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.