இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் இன்று(13) இடம்பெற்ற “Times School of Higher Education” உயர் கல்விக்கான பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வரையறுக்கப்பட்ட விஜய பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்ததாக டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டு, மூன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இளைஞர்கள் எதிர்காலத்தில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைவதன் மூலம் உலகத் தரத்திற்கு ஏற்ப தரமான கல்வியை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று நிர்வாகக் குழு கூறுகிறது.
இதன் போது “Times School of Higher Education” என்ற புதிய இணையதளத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய அறிவு தேவைப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் டிஜிட்டல் அகாடமியையும் கொண்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களால் நம் நாட்டு இளைஞர்கள் பெரிதும் பயனடையலாம்.
50,000 இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊடாக தொழில் பயிற்சி வழங்க அரசாங்கம் நிதியுதவி அளிக்கவுள்ளது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நிறுவனங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றும் திறன் எங்களிடம் உள்ளது. தற்போதுள்ள பயிற்சி நிறுவனங்களுக்கு மேலதிகமாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியுடன், முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து, புதிய தொழில்கள் ஆரம்பிக்கும்போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சுமார் 100,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும் நாம் உருவாக்க நினைக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு, இதுபோன்ற நிறுவனங்கள் அவசியம். எனவே, நமது நாட்டில் இதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரச மற்றும் அரச சாராத வகையில் அதிகரித்து, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க எதிர்பார்க்கிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.