ட்ரூடோவைப் பார்த்து குரைக்கும் கொழும்பு
ட்ரூடோவைப் பார்த்து குரைக்கும் கொழும்பு

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைப் படுகொலைகளுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றும், அதற்காகத்தான் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என்றும் அறிவித்திருக்கின்றார் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ. பிரதமர் ட்ரூடோ ஈழத்தமிழர்களுக்கு எதிரான துன்பியல்களுக்காக கொழும்பை பொறுப்புக்கூற வலியுறுத்துவதும், அவருடைய கூற்றுகளைக்கண்டு 'மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பாக' கொழும்பு திமிறியெழுவதும் வழக்கமானதுதான். இதன் தொடர்ச்சியாகவே பிரதமர் ட்ரூடோவின் இந்த வருட அறிவிப்பையும் கொள்ளலாம்.

ட்ரூடோ - கொழும்புக்கு இடையிலான இந்த மோதலில், இந்த வருடத்தின் புது அறிமுகமாகியிருக்கின்றார் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான உமாகுமாரன். 'ஜூலைக் கலவரங்களும், அதன்மூலம் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட துன்பியல்களும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும். 41 ஆண்டுகளாக கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னரான நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு நாம் துணையிருப்போம்' என்று அறிவித்திருக்கின்றார் அவர். தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின், வெறுமனே அறிக்கைகள் மூலமோ அல்லது உள்நாட்டுக் குடுமிபிடிச் சண்டைகள் மூலமோ அது சாத்தியமே இல்லை. சர்வதேசப் பிடிமானங்கள் இல்லாமல் எந்தவொரு நீதியும், குற்றவாளிகளுக்கான தண்டிப்புகளும் இன்று வாய்க்கப்போவதில்லை என்ற நிலையில், தங்களுக்கான ஆதரவுத் தளத்தை ஓரணிப்படுத்த வேண்டியதும் பலப்படுத்த வேண்டியதும் தமிழர்கள் முன்னுள்ள பெரும் பொறுப்பாகவே காணப்படுகின்றது. ஆனால், அந்த வாய்ப்பை தமிழர் தாயகம் காலாகாலமாகத் தவறவிட்டுக்கொண்டே வந்திருக்கின்றது. தற்போதும்கூட இந்த வரலாற்றுத் தவறில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எங்களின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எத்தனிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

கனேடியப் பிரதமர் ட்ரூடோவின் கருத்துகளை கொழும்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'ட்ரூடோ கனேடியத் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு தேர்தல் நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்' என்றுள்ளது கொழும்பு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் செறிந்துவாழும் சென். போல்ஸ் தொகுதியை ட்ரூடோ தரப்பினர் இழந்துள்ள நிலையில், ட்ரூடோவின் தோல்வி, தேர்தலை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை முன்வைக்க கொழும்புக்குச் சில பிடிமானங்களைக் கொடுத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், ட்ரூடோவின் கருத்துகள் தேர்தலை மையப்படுத்தியவை அல்ல என்று அவருக்கு பெருமெடுப்பில் ஆதரவை வழங்க வேண்டிய தார்மீகக் கடமை இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைமைகளுக்கு உண்டு. அதை எங்களின் அரசியல் தலைவர்கள் செய்ததாக இல்லை. சர்வதேசத்தில் எமக்கு ஆதரவாக எப்போதெல்லாம் ஒரு பொறி தெரிகின்றதோ, அதை வியாபிக்கச் செய்யவும், தீவிரமாகப் பற்றவைக்கவும் தமிழ்த் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேவை இன்று உணரப்படுவது ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அல்ல. மாறாக எங்களின் விருப்பங்கள், அபிலாஷைகள் வேறு என்பதை உலகறியச் செய்வதற்காகத்தான். அதை உலகமே வெளிப்படுத்தும்போது வாய்ப்பைப் பயன்படுத்தாதிருப்பது சுத்த அபத்தம்.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

425 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.