இந்தியாவின் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல்நலம் பாதித்தது போல் சோர்வாக இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
அப்போது தனது 13 வயதில் இருந்து, பலரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய மாணவி, தன்னை சீரழித்தவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் பொலிஸார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 20 பேரை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் இருந்தனர்.
காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்கள் மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாணவி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்தபடி உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பாடசாலை மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை இந்திய தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணைய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை பொலிஸார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பாடசாலை மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களின் விசாரணையை உடனடியாக தொடங்கினர். அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.