தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தலைமையில் திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29) காலை 10.00 மணியளவில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் குறித்த முடிவை மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்குமாறும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களினால் எடுக்கப்பட்டுள்ள முடிவு தொடர்பாக எதிர்வரும் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காத நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் அவற்றை பரிசீலித்து முடிவினை அறிவிக்கலாம் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழ் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.