தமிழ்த் தேசியத்தின் பொறுப்பு!
தமிழ்த் தேசியத்தின் பொறுப்பு!

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திவந்த கன்சர் வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, தொழிற்கட்சி ஆட்சியமைத்திருக்கின்றது. 650 தொகுதிகளில் வெற்றிக்கு 326 தொகுதிகளே தேவை என்ற நிலையில், 410 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றது தொழிற்கட்சி. இதனால், இன்னும் ஓரிரு தினங்களில் தொழிற்கட்சியின் தலைவரான கீர் ஸ்ரார்மர் பிரிட்டனின் பிரதமராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.

கீர் ஸ்ரார்மர் உலகெங்கும் இடம்பெற்றுவரும் அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர். மனித உரிமைகள் சட்டத்தரணியான அவர், ரொனி பிளேயர் பிரதமராக இருந்த காலத்தில் ஈராக் மீதான பிரிட்டனின் படையெடுப்பை வெளிப்படையாகக் கண்டித்தமைக்காக உலகெங்கும் அறியப்பட்டவர். அத்துடன், மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக ராணி எலிசபெத்திடம் இருந்து 'நைட் ஹூட்' பட்டமும் அவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பின்னணியுடைய கீர் ஸ்ரார்மர் அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிட்டவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தார்.

இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாகும். நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக் காது என்பதை பிரிட்டன் உறுதிசெய்யவேண்டும். இலங்கையில் அமைதி மற்றும் அரசியல் உறுதித் தன்மையைக் கட்டியெழுப்பவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்டுவதற்காகவும் தொழிற்கட்சி தன் ஆட்சியில் வலுவாகக் குரல்கொடுக்கும் என்பதை கீர்ஸ்ரார்மர் தன் தேர்தல் பரப்புரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், கீர் ஸ்ரார்மரின் கருத்துகள் செயல்வடிவம் பெறுவதற்கு உரிய அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகளின் பெரும் பொறுப்பாகவே இன்று காணப்படுகின்றது.

போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும், தமிழ்த் தேசியத்தின் சர்வதேச ஆதரவுத்தளத்தை ஓரணியில் இணைக்கவோ அல்லது அத்தகைய பெரும் புள்ளிகளுடனான உறவுகளைப் பலப்படுத்தவோ தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாகத் தவறிழைத்தே வந்திருக்கின்றன. இவ்வாறான சர்வதேச ஆதரவுத் தளத்தை என்று தமிழ்த்தேசியக் கட்சிகள் பலப்படுத்துகின்றனவோ அன்றுதான், நீதிக்கான பயணம் அதன் அடுத்தகட்ட பரிணாமத்தை அடைந்து கொள்ளும். மனித உரிமைகள் செயற்பாட்டா ளரும், சிறந்த சட்டத்தரணியும், மனிதாபிமானி யுமான கீர்ஸ்ரார்மரை அணுகுவதும் கொள்கையளவில் ஒன்றிணைப்பதும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப்போவதில்லை. மேற்கு நாடுகளில் அடுத்தடுத்த ஆட்சிமாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் இக்காலத்தில், தமிழ்த் தேசியத்தின் வெற்றியை, இலங்கைத்தீவுக்கு அப்பாற்பட்டுத் தேடவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருக்கவே செய்கின்றது.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

332 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.