தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள்;
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள்;

பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம்

(செல்வன்)

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடக அமையம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டமை மற்றும், அவரின் வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே முல்லைத்தீவு ஊடக அமையம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைச் சம்பவங்களுக்கு சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்பதை முல்லைத்தீவு ஊடக அமையம் வலியுறுத்துகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த (13) வியாழக்கிழமை, அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு உந்துருளிகளில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் குழுவாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் வீட்டுக்கு வெளியே இருந்த உந்துருளி, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும், பல சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிலிருந்த ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தொடர்ச்சியாக நாடெங்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் பக்கச்சார்பற்ற வகையில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் மற்றும் அரச தலைவர் வரையான உயர்மட்டத்துக்கு கையளிக்கப்பட்ட போதும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசின் இந்த நிலைப்பாடே, எந்த குற்றத்தையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணப்போக்கை ஏற்படுத்தியுள்ளது.

முறைப்பாடு அளிக்கப்படும் போது அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நடைபெற்றிருக்காது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு துணைபோவதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

எனவே தான் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைச் சம்பவங்களுக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் பல ஊடகவியலாளர்கள் மீது இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்களின் மிலேச்சத்தனமாக சித்திரவதைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடக்குமுறைச் சம்பவங்கள் என்பன இடம்பெற்றிருக்கின்றன.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுதல், அரசில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுதல், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் அச்சுறுத்தப்படுதல், தாக்குதலுக்குள்ளாகுதல் உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் கடந்த காலங்களில் 44 தமிழ் ஊடகவியலாளர் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் அதற்கான நீதிகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக தமிழின அடையாளத்தைக் கொண்ட ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தால் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும், சித்திரவதைகளும் தமிழ் ஊடகப் பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீடு தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை என்பது, அவரின் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டுக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும்.

இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு  விளைவிக்கும், அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரிய தரப்புக்களும், பன்னாட்டு அமைப்புக்களும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது. (ஏ)

80 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.