பொதுமக்கள் பெருமளவில் திரண்டு தையிட்டியில் நேற்றும் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் காணி எங்களின் பூர்விக நிலம். ஆதலால், அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் பேரிலும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் ஏற்பாட்டிலும் நேற்றுப் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
தையிட்டியில் எமது பூர்விக காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விகாரையை அமைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதி எங்களின் நிலம். எங்களின் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு வேறு நிலங்களையும் இழப்பீடுகளையும் வழங்கும் எத்தனங்களை நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. விகாரையை அகற்றிவிட்டு, எங்களின் காணிகளை எங்களிடமே ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எமக்கு எமது காணிகள்தான் வேண்டும் - என்றனர்.
நேற்று ஆரம்பித்த போராட்டம், பௌர்ணமி தினமான இன்று வியாழக்கிழமையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டம் ஆரம்பமாகிச் சிறிதுநேரத்தின் பின்னர் போராட்ட இடத்திற்குச் சென்ற பலாலிப் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 22 பேர்களின் பெயர் குறிப்பிட்டு பலாலிப் பொலிஸார் ஊடாகப் பெறப்பட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினரின் இடைக்காலக் கட்டளையை உரத்து வாசித்தனர். அந்தக் கட்டளையை போராட்ட இடத்தில் ஒட்டிவிட்டும் சென்றனர்.
அத்துடன் பொலிஸ் கண்காணிப்பும் நேற்றுப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.