இந்தியா – தெலங்கானாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்றின் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செவெல்லா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இராஜேந்திர பிரசாத் கருத்து தெரிவிக்கையில், விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களின் உடல்கள் எங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
சிறு காயங்களுடன் உள்ள ஆறு பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் மேலும் அறிவுறுத்தினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.